Sunday, 4 January 2015

கப்பம் கட்டிவிட்டு கட்டிடத்தைக் கட்டுங்கள்; அரசு அனுமதி எனும் பரமபத விளையாட்டு

kattumaanam2இளங்கோவன்  ஒரு கட்டிடப் பொறியாளர், இருபது ஆண்டுகளுக்கு மேலாக கட்டிடத் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இளங்கோவன் பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அவர் பல வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளார், அவரது தரமான சேவையும் தொழிலின் மீது இருக்கும் அர்ப்பணிப்பும் ஏராளமான நிரந்தர வாடிக்கையாளர்களை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. சிறந்த கட்டிடங்களைக் கட்டி வாடிக்கையாளர்களுக்கு விற்று நல்ல ஒரு பெயரை ஈட்டி இருந்தார். இருப்பினும் கட்டுமானம் போன்ற போட்டிகள் மிகுந்த ஒரு துறையில் தொழில் செய்வதால் அவரது கையில் பெருத்த மூலதனம் எதுவுமில்லை.
ஒரு கட்டத்தில் சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு சிறிய நிலம் விற்பனைக்கு வந்தது. தொழிலில் முன்னேற வேண்டும் என்ற வேட்கைக் கொண்டிருந்த இளங்கோ அந்த நிலத்தை வாங்க முடிவுசெய்தார். மூலதனம் குறைவாக இருப்பதால் நிலத்தின் மதிப்பில் எழுபது சதவிகிதத்தை அவர் வங்கிகளிடமும் பிறரிடமும் கடனாகப் பெறவேண்டியிருந்தது. அந்த நிலத்தில் நடுத்தர குடியிருப்பு ஒன்றை கட்டவேண்டும் என்று திட்டமிட்டார். உற்சாகத்தில் மிதந்த அவர், தான் சந்திக்கவிருக்கம் சவால்களை உணராமல் இருந்தார். அதனை ஒவ்வொன்றாக சந்திக்க தலைப்பட்டார்.
kattumaanam4நிலத்தை வாங்கியவுடன் நிலத்தினது பட்டாவை தனது பெயரில் மாற்ற அரசிடம் விண்ணப்பித்தார். பட்டா வழங்கல் கணிணி மயமாக்கப்பட்ட போதிலும் அதற்காக இரண்டு மாதம் வரை காத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஏனென்று கேட்டதற்கு வருவாய்துறை ஊழியர்கள் வெள்ளநிவராண பணிகளில் ஈடுபட்டிருப்பதால் உடனடியாக வழங்க இயலாது என்று தெரிவித்தனர். அப்படியே அவருக்கு விரைவாக கிடைக்கவேண்டும் என்றால் சிறிது பணம் செலவு செய்தால் நடக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது. நேர்மையான நபரான இளங்கோ லஞ்சம் கொடுக்க திட்டவட்டமாக மறுத்தார்.
இரண்டு மாதங்கள் வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு தொடர்ந்தது. பலமுறை அங்கே சென்று நினைவூட்டிய பிறகு லஞ்சம் இல்லாமல் பட்டா பெற்றார். அதுவே ஒரு வெற்றியாக அவருக்குத் தோன்றியது.
அடுத்தது கட்டுமானத்திற்கான அரசு அனுமதியைப்பெற வேண்டும். முறையாக நிலத்தை அளந்து கட்டுமானத் திட்டத்தினைத் தயாரித்து இணையம் வழியாக திட்ட அனுமதி பெற விண்ணப்பித்தார். 72 மணி நேர அவகாசத்தில் முடியவேண்டிய இந்த வேலை சில மென்பொருள் பிரச்சனைகளால் தாமதமாகும் என்று கூறப்பட்டது. 15 நாட்களுக்குப் பிறகு இணைய வழியாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியுடனும் பிற ஆவணங்களுடனும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் இணைத்து கட்டிட அனுமதிக்காக விண்ணப்பித்தார்.
kattumaanam2பல நாட்கள் காத்திருந்த பிறகு குறிப்பிட்ட அதிகாரியை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலையை வினவினார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் வேறு சில கவனிப்புகள் நிகழ்ந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான செலவும் தோராயமாக தெரிவிக்கப்பட்டது. இதெற்கெல்லாம் செலவு செய்யமுடியாது என்று மறுத்தால் என்னாகும் என்று இளங்கோ கேட்டார். வேறொன்றும் இல்லை அதிகாரிகள் அனுமதி கொடுக்க ஆர்வம் காட்டமாட்டார்கள், மேலும் காலதாமதமாகும். ஏற்கனவே ஏராளமான வேலைகளுள் அமிழ்ந்து இருக்கும் அதிகாரிகள் உங்களுக்குத் தரவேண்டிய அனுமதிக்கு முன்னுரிமை தரமாட்டார்கள் என்று அக்கறையுடன் தெரிவித்தனர். ஏராளமான பணத்தை முதலீடு செய்திருக்கும் நீங்கள் கட்டிடத்தை ஆரம்பிக்காமல் தாமதம் செய்தால் வட்டியிலேயே பணத்தை இழக்க வேண்டியிருக்கும். அதுவன்றி கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். எனவே இதுபோன்ற செலவுகளைப் பாராது கவனிப்புகளை முடித்துவிட்டு அனுமதியை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினர்.
இளங்கோ உறுதியோடு தன்னால் லஞ்சம் தரமுடியாது என்றும் அதே சமயத்தில் அர்த்தமற்ற தாமதங்களை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். தேவையெனில் அவர்களது உயர் அதிகாரிகளிடம் தாம் எடுத்துச் செல்வேன் என்று உறுதிபடக் கூறினார். அரசு அதிகாரிகள் அவருடைய பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தத்தமது வேலைக்குத் திரும்பினர்.
அடுத்த சில நாட்களில் ஆதித்யா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக சில கேள்விகளை எழுப்பினார். அதற்கான பதில்கள் 15 நாட்களில் தரப்பட்டது. அதில் இதுபோன்ற சிறிய கட்டுமான விண்ணப்பங்களுக்கு 14 நாட்களில் அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அப்படி அனுமதி தரவில்லை எனில் முறையான காரணங்கள் விண்ணப்பித்தவருக்குத் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே இணையம் வழியாக திட்ட அனுமதி பெறப்பட்டிருந்தால் அரசு அதிகாரிகள் வலுவான காரணங்கள் இல்லாமல் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது என்று தெளிவாக இருந்தது.
அடுத்தாக இளங்கோ நீண்ட கடிதம் ஒன்றைத் தயாரித்தார். அதில் அனுமதி வழங்கும் ஆணையத்திடம் தாமதத்திற்கான காரணங்களை கேள்விகளாகத் தொடுத்திருந்தார். ஏன் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று வினா எழுப்பியிருந்தார், மேலும் தாம் நீதிமன்றத்திடம் முறையிடப்போவதாகவும், தனக்கு நேர்ந்துள்ள இழப்பிற்கு அரசு அதிகாரிகள் தமது சொந்தப் பணத்திலிருந்து இழப்பீடு தரவேண்டும் என்று முறையிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
ஒரு வாரத்திற்குப் பிறகு அரசிடமிருந்து அழைப்பு வந்தது. அவருடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், அனுமதிகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குள்ளாக மூன்று மாதங்கள் முழுமையாக முடிந்துவிட்டிருந்தது.
ஒரு வழியாக அந்த மனையில் அடித்தளப் பணிகள் தொடங்கின. ஒருநாள் காலை அந்தப் பகுதியின் நகராட்சி உறுப்பினர் அழைப்பதாக தகவல் வந்தது. எரிச்சலுற்ற இளங்கோ அந்தத் தகவலை அலட்சியப்படுத்தினார். தொடர்ந்து அழைப்புகளுக்கும் பதில் கூறவில்லை. மென்மையாகவும் சற்று கடுமையாகவும் எச்சரிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன, ஆனால் ஆதித்யா அசையவில்லை. வணிகம் செய்வோர் உறுப்பினரை கவனிக்கவில்லை என்றால் வட்டத்தை (மக்களை) எவ்வாறு கவனிப்பது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதுவும் தற்போது பதவி வகிக்கும் உறுப்பினர் வசூலில் உறுதியானவர் என்று தெரிவிக்கப்பட்டது. விசாரித்ததில் உறுப்பினர் தோராயமாக குடியிருப்புக்கு(Apartment) இளங்கோ தமது பிடியில் உறுதியாக இருந்தார். ஒரு லட்சம் ரூபாய் வரை எதிர்பார்ப்பார் என்று தெரியவந்தது.
அடித்தள வேலைகள் முடிந்து மேற்கூரை எழுப்பும் அளவிற்கு கட்டிடம் வந்தது. அதற்காக தெருவில் ஏராளமாக கட்டிட சாமான்கள் சேகரித்து வைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கவனமாக செயல்பட்டார். திடீரென ஒருநாள் நகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வேலையைத் தொடரக்கூடாது என்று இடையூறு ஏற்படுத்தினர். அவர்களுடன் காவலர்களும் வந்து அதட்டினர்.
kattumaanam6வெகுன்டெழுந்த இளங்கோ அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பினார். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தம்மைப்போல பத்து கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. ஏன் எங்களை மட்டும் குறிவைத்து தடுக்கிறீர்கள் என்று கேட்டார். தமக்கு விதிக்கப்படும் தடையை எழுத்து மூலமாக தரும்படியும்,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்கு உண்டான அபராதத்தை தாம் கட்டிவிடுவதாகவும், தேவையெனில் தனிமைப்படுத்தி தம்மை மட்டும் தொந்தரவு செய்ததற்கு நீதிமன்றத்தை அனுகி நிவாரணம் கேட்கப்போவதாகவும் தெரிவித்தார். காவலர்களும் பிற அரசு அலுவலர்களும் இளங்கோவை மேலும் ஒரு முறை எச்சரித்து வெளியேறினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வேலை தொடங்கியது.
இதே போல மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான விண்ணப்பங்களும் பல நிர்பந்தங்களை சந்தித்து தாமதப்படுத்தப்பட்டன. கடைசியாக ஒருவழியாக கட்டிட வேலை முடிவுக்கு வந்தது. இளங்கோ தன்னுடைய உறுதியான நடவடிக்கையால் பத்து லட்ச ரூபாய் மிச்சமாகியிருப்பதை உணர்ந்தார். தோராயமாக கட்டிடத்திற்கான செலவில் இந்தத் தொகை 10 சதவிகிதம் வரை இருக்கும். ஆனால் தாமதத்தினால் ஏற்பட்ட வட்டி அதிகரிப்பு 30 சதவிகிதம், இந்த சேமிப்பை விட அதிகமாக ஆகியிருந்தது. இருப்பினும் ஆதித்யாவுக்கு உள்ளூர வெற்றி பெற்ற மகிழ்ச்சியே ஏற்பட்டது.
இதுபோன்ற ஒரு சிறிய கட்டிடத்திற்கு ஒரு கட்டுமான நிறுவனம் இத்தகைய அழுத்தங்களையம் தொல்லைகளையும் சந்தித்தால் நெடிதுயர்ந்த கட்டிடங்களை கட்டும் நிறுவனங்கள் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கும் என்று வாசகர்களே யூகித்துக்கொள்ளலாம். இது போல கேட்கப்படும் லஞ்சப்பணத்தை ஓரளவு கட்டுமான நிறுவனமும் மீதம் அனைத்தையும் வாடிக்கையாளர்களே மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றனர்.
இவையன்றி பொருளாதார இழப்புகளும், வீட்டின் விலை உயர்வும், உற்பத்தி திறன் பாதிப்பும், அரசுக்கான வரி இழப்பும், வளங்கள் வீணாவதும் கணக்கிடப்பட்டால் வரும் தொகை நம்மை மூர்ச்சடைய செய்யும்.
இதுபோன்ற முறையற்ற சட்டத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் லஞ்சக்கோரிக்கைகளையும் நம்மால் முடிந்த வரை நாம் எதிர்க்க வேண்டும். அதுவே இந்த நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கு நன்மை பயக்கும்.

BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com

Sunday, 28 December 2014

நடுத்தர வர்க்கத்திற்காக வீடுகள் உருவாக்கும் நேர்மையான நிறுவனங்கள் மறைந்து போனது ஏன்?

kattumaanam1நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நீங்கள் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்க விரும்புகிறீர்கள். ஆனால் நெடிதுயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களைத் தவிர்த்துவிட்டு ஆறிலிருந்து எட்டு குடியிருப்புகளைக்(Apartments) கொண்ட ஒரு கட்டிடத்தில் வீடு வாங்க எண்ணுகிறீர்கள். தோராயமாக 60லிருந்து 80 லட்சம் ரூபாய் உங்களால் கொடுக்கமுடியும். இப்படிப்பட்டத் தேவையுடன் நீங்கள் தேடினால் முறையான அனுமதிகளோடும் அரசு விதித்த கட்டுப்பாடுகளோடும் கட்டப்பட்ட ஒரு குடியிருப்பை(Apartments) காண்பது மிகவும் அரிது.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை நகரத்திலும், புறநகரிலும் பல்வேறு நிறுவனங்கள் நேர்மையாகவும் அரசு விதிகளை மதித்து முறையாகவும் கட்டிடங்கள் கட்டிவந்தன. இப்போது அப்படிப்பட்ட நிறுவனங்களைச் காணவேண்டும் என்றால் அளவுகடந்த பொறுமையும் யோகமும் இருக்கவேண்டும். இன்றும் ஏராளமான நடுத்தர கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தாலும் நீங்கள் உற்றுநோக்கினால் பல அரசு கட்டுப்பாடுகள் காற்றில் விடப்பட்டிருக்கும். இந்தக் கட்டிடம் அரசு விதித்துள்ள விதிகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பினால் ஆம் என்ற உறுதியான பதில் உங்களுக்குக் கிடைக்காது. மேலும் பிரிக்கப்படாத மனையின்(UDS) அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்தால் சரியாக இருக்காது. நீங்கள் இன்னும் அதிகப்பிரசங்கித் தனமாக கழிவுநீர் சுத்திகரிப்பு, மின்சார சேமிப்பு, மின்சார பாதுகாப்பு போன்ற வசதிகளை எதிர்பார்த்தால் விரட்டியடிக்கப்படுவீர்கள்.
நெடிதுயர்ந்த கட்டிடங்களைக் கட்டும்போது சென்னை மாநகர பெருவளர்ச்சி ஆணையம் (CMDA) விதித்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாமல் குடியேறுவதற்கான அனுமதியைப் பெறமுடியாது. ஆனால் இத்தகைய கட்டிடங்கள் நகருக்கு வெளியே கட்டப்படுகின்றன. அதனை விரும்பாமல் நகரின் புறநகர் பகுதிகளில் சிறிய அளவிலான வீடுகளை வாங்க விரும்பும் மக்கள் விதிமீறல்களையே சந்திக்கவேண்டியிருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் இத்தகைய நடுத்தரவகை குடியிருப்புகளில்(Apartments) ஐந்து சதவிகிதமே முறையாகவும் நேர்மையாகவும் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஐந்து சதவிகிதத்திலும் நவீன வசதிகள் இருக்கும் கட்டிடங்கள் மிகவும் குறைவு. அதாவது வண்டி நிறுத்தங்கள் (car parking), நீர் சுத்திகரிப்பு சாதனங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி, வெப்பக்காப்பு சாதனங்கள், ஏணிகள்(Lift), மின்சார பாதுகாப்பு சாதனங்கள் போன்றவை அறவே இருக்காது.
kattumaanam3இவ்வாறு நிலைமை மாறியதற்கான காரணங்கள் என்ன?
  • சிறிய அளவிலான மனைகளுக்கு (2400, 3600 சதுரடி) எப்பொழுதும் அதிகமான தேவை இருந்து வருகிறது. ஏனென்றால் தனி வீடுகள், கடைகள், அலுவலகங்கள் கட்டுவதற்கு வாங்க விரும்புகின்றனர். எனவே இந்த நிலங்களுக்கான கிராக்கி அதிகமாகி உள்ளது.
  • உதாரணமாக நேர்மையான ஒரு நிறுவனம் சதுரடி 5000 ரூபாய்க்கு குடியிருப்புகளை(Apartments) விற்க நினைத்தால் அந்தப் பணத்திற்குள் கீழ்காணும் செலவுகளை அடக்கவேண்டியிருக்கும். அரசு அனுமதி கட்டணங்கள், செலவுகள், முதலுக்கான வட்டி, கட்டிடம் கட்டும் செலவு, பிற எதிர்பாரா செலவுகள் மற்றும் அவரது லாபம். கொஞ்சம் மிஞ்சிப்போனால் சதுரடி 5500 ரூபாய்க்கு விற்க முயலலாம்.
  • மேலே சொல்ல கணக்கில் திட்டமிட்டால் அவர் கட்டிடத்திற்காக வாங்கும் அடிமனைக்கான தொகை 2400 சதுரடிக்கு 90 லட்சத்தைத் தாண்ட முடியாது. ஆனால் இந்தத் தொகையை மனை விற்பவர்களிடம் சொன்னால் அவர்கள் விற்க முன்வரமாட்டார்கள்.
  • ஏனென்றால் நிலத்தின் உரிமையாளர்கள் 2400 சதுரடிக்கான மனைக்கு 1 கோடி ரூபாய் வரை கேட்பார்கள். சென்னையில் பல இடங்களில் நிலைமை அவ்வாறு இருக்கிறது. ஆகவே நிலத்தின் உரிமையாளர் பேரம் பேசவேண்டும் என்பதற்காகவே மனையை 1கோடியே 10 லட்சம் என்று சொல்லுவார். இந்தத் தொகை காற்றில் பரவ, மற்ற நில விற்பனையாளர்களும் அதேபோல கேட்கத் தொடங்குவர்.
  • பெரும்பாலான மனை உரிமையாளர்களுக்கு மனையை விற்கவேண்டி நிர்பந்தம் அறவே இருப்பதில்லை. ஏனென்றால் மனையின் விலை பல்வேறு பொருளாதார காரணங்களால் உயர்ந்து இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நிலம் வாங்கப்பட்டிருக்கும். எனவே அதனை உடனடியாக விற்கவேண்டும் என்ற அவசரம் இருக்காது. அதனால் பல உரிமையாளர்கள் நிலத்தை விற்க அவசரப்படமாட்டார்கள்.
  • கட்டிடம் கட்டும் நிறுவனம் மேலே சொன்ன மனையை 1 கோடியே 5 லட்சத்திற்கு வாங்குவதாக வைத்துக்கொண்டால் நேர்மையாக அந்த இடத்தில் கட்டிடம் கட்டி விற்று லாபம் அடைய முடியாது. மனையில் உள்ள இடம் முழுவதும் கட்டிடத்தால் நிரப்பினால் மட்டுமே அவரால் சமாளிக்க முடியும்.
  • இதனால்தான் 5 குடியிருப்புகள் என்று திட்டமிடப்பட்ட இடங்களில் 7 குடியிருப்புகள்(Apartments) வரை கட்டப்பட்டிருக்கிறது. அல்லது ஒவ்வொரு குடியிருப்பும் திட்டமிடப்பட்ட அளவை விட பெரியதாக கட்டப்படுகிறது. அவ்வாறு கட்டப்படும் பொழுது காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் பற்றாக்குறை ஏற்படுகிறது.
  • அதிகப்படியாக குடியிருப்புகள்(Apartments) கட்டப்படுவதால் பிரிக்கப்படாத மனையின்(UDS) அளவானது ஒவ்வொரு குடியிருப்பு(Apartments) உரிமையாளருக்கும் குறைகிறது.
  • குடியிருப்பை(Apartments) வாங்கும் ஒருவர் வழக்கறிஞரை அணுகி சட்டச்சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறதா என்று ஆலோசனை பெற்று வாங்கிவிடுகிறார். மேலும் அருகில் உள்ள குடியிருப்புகளின்(Apartments) விலையோடு ஒப்பிட்டு மகிழ்ச்சியும் அடைகிறார். ஆனால் உள்ளே மறைந்திருக்கும் தகிடுதத்தங்கள் அவருக்குத் தெரிவதில்லை. போதிய காற்றும் வெளிச்சமும் அந்த வீட்டில் வாழும் போது கிடைக்காது என்று புரிவதில்லை.
இந்த சூழ்நிலையில் நேர்மையான நிறுவனம் கட்டிடம் கட்ட மனையை வாங்கவே இயலாது.
இத்தகைய நடுத்தர வர்க்க குடியிருப்புகளை(Apartments) அரசின் கண்காணிப்பு மிகவும் குறைவாக இருப்பதால் நல்ல ஒரு குடியிருப்பு(Apartments) கிடைப்பது குதிரைக்கொம்பு.
எங்காவது ஒரு மனை விற்பனையாளர் தாமே ஓரிரு குடியிருப்புகளை (Apartments) எடுத்துக்கொண்டு மீதியினை கட்டிட நிறுவனத்திடம் ஒப்படைத்தால் மட்டுமே முறையான விதிகளுக்கு அடங்கிய கட்டிடம் கட்டப்படும். அல்லது மனை விற்பனையாளருக்கு சமூக பொறுப்புணர்ச்சி இருந்தால் சரியான விலையை முடிவு செய்வார். அப்பொழுதுதான் கட்டிடத்திற்கு வேண்டிய அடிப்படையான கூறுகள் நிறைவேற்றப்பட்டிருக்கும். அர்த்தமற்ற வகையில் கட்டிடம் பெரிதாக அமைக்கப்பட்டிருக்காது.
இத்தகைய நேர்மையான, பொறுப்புணர்வு உள்ள மனை விற்பனையாளர்கள் சென்னையில் இருந்தால் அது உலக அதிசயமே. ஏனென்றால் யார் எக்கேடு கெட்டால் என்ன எனக்கு என்னுடைய நிலத்திற்கு அதிக விலை கிடைக்கவேண்டும் என்ற எண்ணமே மக்களிடம் நிலவுகிறது.
மேற்சொன்ன காரணங்களால் நேர்மையாக, முறையாக நடுத்தர வகை கட்டிடங்கள் கட்டும் நிறுவனங்கள் காணாமல் போகிறது.
ஆக இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
அரசின் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் மற்றும் குடியிருப்பை(Apartments) வாங்கும் வாடிக்கையாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றி இருக்கிறார்களா என்று விசாரித்து அறிய வேண்டும். முறையான நிபுணரைக் கொண்டு பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மனை விற்பனையாளர்களும் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இவையெல்லாம் நடந்தால்தான் நடுத்தர வர்க்கத்திற்கு நகருக்குள் நல்ல வாழ்வு வாழ சரியான குடியிருப்புகள் (Apartments) அமையும். இல்லையேல் விலை கொடுத்து வீடு வாங்கினாலும் நல்ல வாழ்க்கைத் தரம் அமையாது.

BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com

Sunday, 21 December 2014

அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்தது ஏன்?


       kattumaanam1
சென்னையில் உள்ள மௌலிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததால் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியை சில மாதங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் பார்த்தோம். இந்த அளவு பெரிய விபத்து சென்னையில் முதன்முதலில் ஏற்பட்டிருந்தாலும் இதுவே கடைசி விபத்தாக இருக்காது என்பது எனது கருத்தாகும். இந்த விபத்து நிகழ்ந்த சில நாட்களிலேயே செங்குன்றம் அருகே மிகப்பெரிய சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் கொல்லப்பட்டனர் அவர்களுள் குழந்தைகளும் அடங்குவர். சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் இத்தகைய விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.
மேலே சொன்ன கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு பல்வேறு காரணங்கள் அலசப்பட்டன. அவற்றுள் ஒன்று கட்டிடத்தில் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததை விட அதிகப்படியான மாடிகள் கட்டப்பட அனுமதி பெறப்பட்டு வேலைகள் செய்யப்பட்டதாகும். அதாவது கட்டிடத்தின் அடித்தளத்தை பலப்படுத்துவதை தவிர்த்துவிட்டு இருமடங்கு எடையை உயர்த்தியதால் விபத்து நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டது.
அடுத்ததாக கட்டிடம் ஏரிக்கரையில் அமைந்ததால் உறுதியான அடித்தளம் அமையாமல் பிடிமானம் அற்று நொறுங்கியது என்று சொல்லப்பட்டது. இவையன்றி மற்றொரு காரணமும் சொல்லப்பட்டது. கட்டிடத்தின் வடிவமைப்பும், கட்டுமான உறுதியும் சரியற்றதாகவும், வரைமுறைகளுக்கு உட்படாததாகவும் இருந்தது காரணம் என்று சொல்லப்பட்டது.
பலர் சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் அதிகப்படியான மாடிகளைக் கட்ட அனுமதி கொடுத்தது தவறு என விமர்சித்தனர். அங்குள்ள ஊழல் அதிகாரிகளின் துணையைக் கொண்டு தவறு நிகழ்த்தப்பட்டது என்றும் கூறினர். ஆனால் குழுமத்தின் அனுமதிகளை நாம் குற்றம் சொல்ல முடியாது, ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பையோ,கட்டிடம் அமைந்திருக்கும் நிலத்தின் தன்மையையோ ஆய்ந்து அலசுவது குழுமத்தின் வேலை அல்ல. பார்க்கப்போனால் குழுமத்தின் அனுமதியில் கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், அதனை கட்டுபவரின் பொறுப்பு என்றும் அதற்கு குழுமம் எவ்வகையிலும் பொறுப்பாகாது என்றும் எழுதப்பட்டிருக்கும்.
ஒருவேளை அதிகப்படியான மாடிகளைக் கட்டுவதற்கு அனுமதி பெறப்படும்வேளையில் கட்டிடம் பாதி எழுப்பப்பட்டிருந்தால் குழுமம் கட்டிடத்தை ஒரு நிபுணரைக்கொண்டு பரிசோதிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும். அதாவது பாதி கட்டப்பட்டிருந்த கட்டிடம் அதிகப்படியான மாடிகளைத் தாங்குமா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கும். இது நடந்ததா என்று தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் இத்தகைய பரிசோதனைகளை செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
kattumaanam3இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த கட்டமைப்பு வடிவமைப்பாளர் (Structural Designer) சில நாட்களுக்குப் பிறகு கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும்,அந்தப் பணிகளை வேறு ஒருவர் கவனித்தார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஆரம்பகட்ட வடிவமைப்பிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதாரணமாக தூண்கள், விட்டங்கள் போன்றவற்றின் அளவுகள் மாற்றப்பட்டது. எனக்கு சில கேள்விகள் எழுந்தன. அவற்றை கீழே காணுங்கள்.
  1. வங்கியில் வேலைபார்த்து விட்டு பிறகு கட்டிட முதலாளியாக உருவெடுத்த ஒருவர் இத்தனை பெரிய உயரமான கட்டிடத்தை எழுப்பும்பொழுது எந்த நம்பிக்கையில் கட்டிட பொறியாளர்களையும், கட்டிட வடிமைப்பாளர்களையும் கலந்துகொள்ளாமல் கட்டிடத்தைக் கட்டினார். ஆரம்பத்தில் வேலைபார்த்த வடிவமைப்பாளர் கட்டிடதிலிருந்து விலகிய பின்பும் கட்டுமானம் தொடர்ந்து எந்த நம்பிக்கையில் கட்டப்பட்டது?
  2. கட்டிடத்தின் வரைபடங்களை வரைந்துதரும் ஒருவர் வடிவமைப்புப் பொறியாளராக செயல்பட்டது எவ்வாறு?
  3. இத்தகைய உயரமான கட்டிடத்தில் உள்ள குடியிருப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு ஆய்வையும் மேற்கொள்ளாமல் எப்படி வாங்கினார்கள்?
  4. வாங்கிய எந்த வாடிக்கையாளரும் நிபுணரான ஒரு பொறியாளரைக்கொண்டு பரிசோதனை செய்யாதது ஏன்? (கட்டிடம் வாங்குதல் போன்ற பெரிய முதலீட்டை செய்யும் பொழுது அதனை ஆய்வு செய்ய நிபுணத்துவம் நமக்கு இல்லையென்றால் அப்படிப்பட்ட நிபுணர் ஒருவரை அழைத்து பரிசோதிக்க வேண்டுமா? வேண்டாமா?)
  5. அந்தக் கட்டிடத்தை அங்கீகரித்த வங்கியின் பொறியாளர்கள் ஒருவர் கூட குறைபாடுகளை ஏன் எடுத்து சொல்லவில்லை?
ஏன் இந்த வீழ்ச்சி?:
பத்தாண்டுகள் முன்புவரை கட்டிட முதலாளிகள், கட்டிட வடிவமைப்பாளர்கள், கட்டிடப் பொறியாளர்கள், மண் பரிசோதனையாளர்கள் போன்றோரிடம் ஒரு பொறுப்புணர்ச்சி இருந்தது. நிலத்திற்குத் தகுந்தவாறு கட்டிடம் கட்டப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர். கட்டிட வடிவமைப்பு நிலத்திற்குத் தோதாக அமையவில்லை என்றால் உரிய நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, தேவையென்றால் மொத்த வடிவமைப்புமே மாற்றத்திற்குள்ளானது. வடிவமைப்பாளர்கள் கட்டிடத்திற்கான அடித்தளம், தூண்களின் அகலம் மற்றும் உறுதி போன்றவற்றை மனதிற்கொண்டு வடிவமைத்தனர். நாட்கள் செல்ல கணிணி மயமாக்கலும், பணத்தாசையும் வடிவமைப்பாளர்களை தவறான வழியில் தள்ளியது. முன்பெல்லாம் சிறிய தவறுகளைக் கூட கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்த பிறகே கட்டிடத்தைத் தொடர்ந்தனர். அதன் விளைவாக எழும் கட்டிடம் மிகவும் வலுவானதாகவும் உறுதியுடைதாகவும் அமைந்திருந்தது. தற்காலத்தில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் கட்டிட முதலாளிகளின் அழுத்தத்திற்கு பணிந்து வடிவமைப்பாளர்கள் பிறழ்ந்து விடுகின்றனர். முதலாளிகளின் தயவை வேண்டி பாதுகாப்பைப் புறந்தள்ளி லாபகரமான நோக்கில் வடிவமைப்புகளை அமைக்கின்றனர். தற்பொழுது கட்டிடத்தை விரைவாக முடிக்கவேண்டும் என்ற அவசரம் ஆய்வுகள், பரிசோதனைக்கான நேரத்தைக் குறைக்கிறது. கட்டிடப் பொறியாளர்கள் முன்பு அதன் உறுதியில் கவனமாக இருப்பார்கள். தற்போது அப்படி இல்லை.
சில ஆண்டுகளாக கட்டிட முதலாளிகளும் முதலீட்டாளர்களும் பெருவாரியான வடிவமைப்பு கூறுகளைத் தீர்மானிக்கின்றனர். எத்தகைய தூண்கள், விட்டங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. கட்டிடப் பொறியியல் குறித்த அறிவு சற்றும் இன்றி மூக்கை நுழைக்கும் இந்த நபர்கள் நல்ல ஒரு வடிவமைப்பு அமைவதைத் தடுக்கின்றனர், சில நேரங்களில் அடுத்த கட்டமான மின்சாரம், தீ பாதுகாப்பு போன்றவற்றிலும் தலையிடுகின்றனர். இவர்களின் தொல்லையால் சில வடிவமைப்பாளர்கள் தரமற்ற உறுதியற்ற கட்டிடங்கள் உருவாக உடந்தையாக இருக்கின்றனர். இந்த இழிநிலையுடன் மோசமான மண்ணும் தவறான கட்டிட வேலைகளும் நடைபெற்றால் இங்கே கேடு விளையாமல் வேறு என்ன விளையும். இவை போதாதென்று மோசமாக சரிந்து வரும் பொறியியல் கல்வித்தரம் மற்றொரு முக்கியக் காரணமாக அமைகிறது. மிக மிக அடிப்படையான கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாத பல இளம் பொறியாளர்களை சந்தித்துள்ளேன். இவர்களைக் கொண்டு வேலை நடந்தால் அது எந்த அழகில் இருக்கும். ஆக மேற்கண்ட விபத்தானது நமது கட்டிடத் துறையைப் பீடித்திருக்கும் நோய்களின் அறிகுறிதான். நோயைத் தீர்ப்பது என்பது மிக நீண்ட கடினமான செயலாகும். அதனைத் தீர்க்க நாம் இன்னும் முயற்சியைத் தொடங்கவே இல்லை. முடிவாக என ஒன்றைத்தான் சொல்ல முடியும், எளிமையான, விரைவான தீர்வு என்று ஒன்று இல்லை.                          



BVe Consulting Engineers

Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com
www.bveconsultingengineers.com




Saturday, 13 December 2014

அடுக்குமாடி குடியிருப்புகளை (Apartment) வாங்கும்போது பெருநிறுவனங்களை கண்மூடித்தனமாக நம்பலாமா?

kattumaanam1சமீபத்தில் கட்டிடங்களை விற்பனை செய்யும் பெருநிறுவனம் ஒன்று பல தவறான காரணங்களுக்காக செய்திகளில் அடிபட்டது. அரசின் கண்காணிப்பு ஆணையங்கள் இந்த நிறுவனத்திற்கு பெருத்த அபராதத்தை விதித்தன. அதற்குக் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சேவைக்குறைவு, ஏகபோக(Monopoly) வியாபாரம் செய்வது போன்றவை சொல்லப்பட்டது. இப்படி அபராதம் விதிக்கப்பட, நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்த வாடிக்கையாளர்களைப் பாராட்டவேண்டும். இப்போது விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏன் முறையாக விசாரனை செய்வதோ,கேள்விகளைக் கேட்டு தகவல்களைப் பெறுவதோ செய்வதில்லை என்பது விந்தையாக உள்ளது. பெருநிறுவனங்களால் கட்டப்படும் கட்டிடங்கள் சிறப்பானதாகவே இருக்கும் என்று நம்புவது இதற்குக் காரணமாக இருக்குமோ?. இந்த விவகாரத்தில் இந்த மனநிலையே பிரச்சனைக்கு முழுகாரணம் என்று அறியப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட நிறுவனம், நகரத்தின் ஒரு நடுப்பகுதியில் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு அனுமதி பெற்றிருந்தது. அரசின் அனுமதி இத்தனை மாடிகள் மட்டுமே கட்டப்படவேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. அருமையாக வாடிக்கையாளர்களைக் கவரும் விதமான முப்பரிமாணப் படங்களை நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. அந்தப் படங்களைப் பார்த்தால் நகரத்தில் இப்படியும் ஒரு சொர்க்கமா என்று எண்ணும் படியாக இருந்தது. எல்லாம் சிறப்பாக சென்றுகொண்டிருந்த வேளையில் அந்தப் பெருநிறுவனம் தனது மற்றொரு முகத்தைக் காட்டியது. வழக்கம் போல ஒரு சில ஊழல் அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாடிகளைக் கட்டிடத்தில் கொண்டு வந்தது. நாம் முன்னமே சொன்னது போல ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் (அபார்ட்மென்ட்) குடியிருப்புகள் அதிகரிக்கும் பொழுது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பிரிக்கப்படாத மனையின் அளவு குறையும். மேலும் புழங்குவதற்கான இடம்,நீர் போன்றவற்றில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் இந்த கட்டிடத்தில் குடியிருப்பு வாங்கியிருந்த பலர் பெரிதும் பாதிப்படைந்தனர்.
இப்படிப்பட்ட பிரச்சனைகளை எவ்வாறு தடுக்கலாம்?
kattumaanam3நாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னரே கட்டிடம் அனுமதிக்கப்பட்ட வரையறைக்குள்தான் இருக்கவேண்டும்,பிரிக்கப்படாத மனையின் அளவு உறுதிசெய்யப்படவேண்டும் என்று எழுதி கையெழுத்திடவேண்டும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் இவ்வாறு எச்சரிக்கையாக நடந்துகொண்டால் பின்னாளில் ஏற்படும் பல தொல்லைகளைத் தவிர்க்கலாம். நிறுவனங்களும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு ஒழுங்காக செயல்படும்.
ஆனால் இந்தியாவில் கட்டிடங்களைக் கட்டி,விற்கும் நபரே ஒப்பந்தத்தின் கூறுகளைத் தீர்மானிக்கிறார். வாங்கும் வாடிக்கையாளர்கள் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடுகின்றனர். அப்படி யாரேனும் கேள்வி கேட்டால்,“எங்களுடைய நிறுவனம் பெரிய நிறுவனம்,பல ஆண்டுகளாக மக்கள் சேவை செய்துவருகிறது,உங்களுக்கு ஒப்பந்தத்தில் கேள்விகள் இருந்தால் நீங்கள் வேறு நிறுவனத்திற்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்”என்று நிறுவனத்தினர் அறிவுறுத்துகின்றனர். மேலும் இது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொதுவான ஒப்பந்தம் ஆகும். உங்கள் ஒருவருக்காக எதையும் மாற்றமுடியாது என்று வம்படியாகக் கூறுகின்றனர்.
வீடு வாங்கவேண்டும் என்ற அழுத்தத்தினால் மக்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தலைப்படுகின்றனர். அடுத்ததாக 70 சதவீத முன்பணம் கட்டவேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது. “ஐயோ! என்னால் அவ்வளவு பெரிய தொகையை உடனடியாகக் கட்ட இயலாது.”என்று சொன்னால் அவர்களுடைய பதில் இந்த மாதிரி உள்ளது,
“கட்டிடம் கட்டும் தொழிலைப் பற்றி உங்களுக்கே தெரியும். அதன் மிகப் பெரிய செலவே அடிமனையின் விலைதான். ஒரு நிறுவனம் பெருந்தொகையை செலவிட்டே அந்த அடிமனையை வாங்குகிறது. மேலும் கடன் வழங்கும் பல வங்கிகள் கட்டிடத்தை அங்கீகரித்துள்ளன. ஆகையால் 70 சதவீதம் என்பது குறைவான தொகையே.”என்று வாதிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. கட்டிடம் விரைவில் முடியவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிர வேற வழியே இல்லை.
kattumaanam2இதற்கு வேறு வழியே இல்லையா?,உள்ளது. முறையான ஆலோசகரிடம் தாம் வாங்கப்போகும் வீட்டைப் பற்றி எடுத்துக்கூறி ஒப்பந்தத்தைக் காண்பித்து சரியான ஆலோசனை பெற்றால் சிக்கல்களிலிருந்து விடுபடலாம். ஆனால் இங்கே அத்தகைய ஆலோசகர்களைத் தேடுவதும் பிரச்சனையாக இருக்கிறது. தேவையான அளவில் அவர்கள் இருக்கிறார்களா என்பது கேள்வியே. வீடு என்பது ஒரு மனிதனின் மிகப்பெரிய முதலீடாக இருக்கும் பொழுது அரசு மக்களைப் பற்றி சிந்தித்து கொள்கைகளை முறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பெருநிறுவனங்கள் வாடிக்கையாளர்களை நிர்பந்தம் செய்வதையும்,சிக்கல்களில் தள்ளிவிடுவதையும் தவிர்க்கமுடியும்.
வீடு மற்றும் மனை வாங்குவதிலும், விற்பதிலும், அவற்றை மதிப்பீடு செய்வதிலும் ஆலோசனைகள் தேவைப்பட்டால் கீழ்காணும் நிறுவனத்தை அணுகலாம்.
BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com

Thursday, 11 December 2014

அடுக்குமாடி குடியிருப்பைத் (Apartment) தேர்வு செய்வது எப்படி?

                  kattumaanam1

தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றும் முருகன் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க முடிவு செய்தார். அவரிடம் 15 லட்சம் ரூபாய் சேமிப்பு இருந்தது. வங்கிகள் அவருக்கு 35 லட்சம் வரை கடன் கொடுக்க முடியும் என்று உறுதியளித்தன. தென் சென்னை புறநகர் பகுதியில் சில குடியிருப்புகளை முருகன் விசாரித்து வைத்திருந்தார். அவற்றில் ஆறு குடியிருப்புகளை நேரில் சென்று ஆய்வு செய்து மூன்றை தேர்வு செய்தார். அவை மூன்றுமே ஒரே பகுதியில் அமைந்திருந்தன. மூன்றுமே 2500லிருந்து 3000 சதுரடி மனைகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. மூன்றிலிருந்து, நான்கு வருட கட்டுமான அனுபவம் பெற்ற கட்டிட முதலாளிகளால் அவை கட்டப்பட்டிருந்தன.
முருகனின் குடும்பத்தினர் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உடனடியாகப் பணம் கொடுத்து வாங்க நிர்ப்பந்தம் செய்தனர்.
முதலாவது அடுக்குமாடி குடியிருப்பு 1000சதுரடி குடியிருப்பு வீடாகவும்(apartment), இரண்டாவது மாடியிலும் அனைத்து செலவினங்களும் உட்பட சதுரடிக்கு 4800 ரூபாய் என்றும் விலைக்கு வந்தது. அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு 250 சதுரடி பிரிக்கப்படாத மனை ஒதுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 10 குடியிருப்புகள் கொண்ட அந்த கட்டிடத்தில் இரண்டு மாடிகள் கட்டப்பட்டிருந்தன. அத்துடன் வாகன நிறுத்த வசதியும் இருந்தது.
இரண்டாவது குடியிருப்பானது 900 சதுரடி குடியிருப்பு வீடாகவும்(apartment), முதல் மாடியிலும்,அனைத்து செலவினங்களும் போக சதுரடிக்கு 5000 ரூபாய் என்றும் விலைக்கு வந்தது. பிரிக்கப்படாத மனையளவு 550 சதுரடி கிடைத்தது. ஆறு குடியிருப்புடன் இருந்த அந்த கட்டிடம் வாகன நிறுத்த வசதிகளுடனும் இரண்டு மாடிகளுடனும் கட்டப்பட்டிருந்தது.
மூன்றாவது குடியிருப்பானது 1200 சதுரடி குடியிருப்பு வீடாகவும்(apartment), கீழ்த்தளத்தில் கட்டப்பட்டது மற்றும் சதுரடி 4900 ரூபாய் என்ற விலைக்கு வந்தது. பிரிக்கப்படாத மனையளவு 400 சதுரடியாகவும், 8 குடியிருப்பு கொண்ட மனையாகவும், வாகன நிறுத்தத்துடன் இரண்டு மாடிகளுடனும் கட்டப்பட்டிருந்தது.
இப்பொழுது முருகன் எந்த அடுக்குமாடி குடியிருப்பைத் தேர்வு செய்யவேண்டும்? சில கேள்விகளைக் கேட்போம்?
பொதுவாக மக்கள் எண்ணுவது போல அதிகபட்ச சதுரடி பரப்பளவும் அதேநேரத்தில் குறைந்த விலையும் கொண்ட குடியிருப்பைத் தேர்வு செய்யலாமா?, அந்த வரையறையில் வரக்கூடிய முதலாவது குடியிருப்பு முருகனுக்கு சரியாக இருக்குமா?
பிரிக்கப்படாத மனை என்பது எந்த அளவிற்கு முக்கியமானது?
மிகச்சிறிய நிலப்பரப்பில் (2400 சதுரடி) 10-லிருந்து 12-குடியிருப்புகளைக் கட்டுவது சரியாக இருக்குமா?
பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்படாத புறநகர் பகுதிகளில் சமையலறை, கழிவறை, குளியலறை போன்றவற்றிலிருந்து வெளியேறும் நீரை எவ்வாறு வெளியேற்றுவது?
தண்ணீர் பஞ்ச காலங்களில் நகராட்சியிலிருந்து பெறப்படும் தண்ணீரையோ அல்லது வெளியில் வாங்கப்பட்ட தண்ணீரையோ தேக்கிவைக்க தொட்டி உள்ளதா? அந்தத் தொட்டியானது கழிவு நீர் தொட்டிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது? கட்டிடத்தில் நடமாடுவதற்கு தேவையான அளவு இடம் உள்ளதா?
மேலே சொல்லப்பட்ட முதலாவது அடுக்குமாடி குடியிருப்பின் அனுமதிக்கப்பட்ட திட்டமானது(plan) இரண்டாவது மாடியை காலியான மாடியாக சித்தரித்துள்ளது இருப்பினும் அந்த இடங்களில் குடியிருப்புகள் உள்ளனவே அதன் பாதிப்புகள் என்ன?
கடைசியாக எந்த குடியிருப்பை வாங்கினால் முருகனுக்கு நிம்மதியும் தொந்தரவற்ற வாழ்வும் அமையும்?
குறைந்த விலை கட்டிடம் என்று வாங்குவது சரியாக இருக்குமா?
மேலே சொன்ன குடியிருப்புகளை எவ்வாறு ஆய்வு செய்வது?
முருகன் மிக அதிக அளவு பிரிக்கப்படாத மனை (undivided share of land) கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதே அறிவார்ந்த செயலாகும். ஏனென்றால் அத்தகைய குடியிருப்பு பல அனுகூலங்களைக் கொண்டுள்ளது.
ஆய்வின் முடிவைக் கீழே காண்போம்:
முதலாவது குடியிருப்பு- கட்டப்பட்ட ஒவ்வொரு சதுரடிக்கும் பிரிக்கப்படாத மனையானது .25 சதுரடி கிடைக்கிறது: அதாவது ஒவ்வொரு சதுரடி கட்டப்பட்ட இடத்திற்கு 25 சதவிகிதம் பிரிக்கப்படாத மனையானது கிடைக்கிறது.
2வது குடியிருப்பு- கட்டப்பட்ட ஒவ்வொரு சதுரடிக்கும் பிரிக்கப்படாத மனையானது .61 சதுரடி கிடைக்கிறது: அதாவது ஒவ்வொரு சதுரடி கட்டப்பட்ட இடத்திற்கு 61 சதவிகிதம் பிரிக்கப்படாத மனையானது கிடைக்கிறது.
3வது குடியிருப்பு- கட்டப்பட்ட ஒவ்வொரு சதுரடிக்கும் பிரிக்கப்படாத மனையானது .33 சதுரடி கிடைக்கிறது: அதாவது ஒவ்வொரு சதுரடி கட்டப்பட்ட இடத்திற்கு 33 சதவிகிதம் பிரிக்கப்படாத மனையானது கிடைக்கிறது.
ஆக இரண்டாவது குடியிருப்பானது முருகனுக்கு அதிகப்படியான பிரிக்கப்படாத மனையைத் தருகிறது. அப்படிப்பட்ட கட்டிடங்கள் விதிமீறல்கள் குறைவாகவும்,கட்டிடத்தை சுற்றி நடமாட திறந்த வெளி இடங்களுடனும் இருக்கும். மேலும் குறைவான குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதால் அதிக நீரும்,புழங்குவதற்கு அதிக இடமும் கிடைக்கும். இந்தக் குடியிருப்பை கூடுதல் விலை கொடுத்து வாங்கவேண்டி நேர்ந்தாலும் நல்ல ஒரு குடியிருப்பு என்பதால் ஏற்படும் விலை உயர்வும் நல்ல வாழ்க்கைத் தரத்தை கொடுப்பதாகவும் இருக்கும். அதிகப்படியான பிரிக்கப்படாத மனை கிடைப்பதால் சதுரடி 5500 ரூபாய் கொடுத்து வாங்கினாலும் மொத்தத்தில் அந்த பரிவர்த்தனை சரியான ஒன்றேயாகும்.
இவ்வாறு நாம் குடியிருப்புகள்(apartment) வாங்குவதில் உச்சபட்ச கவனம் கொள்ளுதல் வேண்டும்.

Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com
www.bveconsultingengineers.com

Wednesday, 10 December 2014

எத்தனை விதத்தில்தான் ஏமாற்றுவார்? வீடு, மனை வணிகத்தில் கவனம் கொள்வீர்…

kattumaanam7உலகமயமாக்கலுக்குப் பிறகு தமிழகத்தில் வீடு மற்றும் மனை பரிவர்த்தனைகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. கற்பனைக்கு எட்டாத அளவு பணம் இவ்வணிகத்தில் புழங்குகிறது. மனைகளில் முதலீடு செய்வதை நமது சமூகம் ஒரு கடமையாகவே கருதுகிறது. இந்த சூழ்நிலையில் அவற்றில் நடைபெறும் தகிடுதத்தங்களும், புரட்டுகளும், பொய்களும் பல மனிதர்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. அத்தகைய ஏமாற்றுகளை வெளிப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை.
1. கணேஷ்,வெளிநாட்டில் வாழும் இந்தியர். இவர் சென்னையின் புறநகரில் மனை ஒன்றை வாங்க முடிவு செய்தார். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பிறகு அந்த மனையில் ஒரு வீட்டைக் கட்டி வாழ்வது அவருடைய யோசனையாக இருந்தது. அப்படி முடியாவிட்டாலும் அந்த மனையின் விலை உயரும். உயர்ந்த பிறகு விற்றால் நகரத்திற்குள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிடலாம் என்று எண்ணினார்.
அவருக்கு சென்னை நகரின் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு புறநகரில் உள்ள விற்பனையாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. அவற்றை ஆய்வு செய்து திருபெரும்புத்தூர் அருகில் ஒரு மனையை தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்த இடத்தில் 100 மனைகள் இருப்பதாகவும் அவற்றில் வீடுகள் கட்டப்பட்டப் பிறகு அந்த இடமே ஒரு சிறிய நகரமாகிவிடும் என்று சொல்லப்பட்டது. நிலத்தின் விற்பனையாளர் பதிவுக்கட்டணத்தை தாமே ஏற்பதாகவும் மூன்று வருடங்களுக்கு மனையை பாதுகாத்துத் தருவதாகவும் உறுதியளித்தார். கணேஷ் அவர்களும் பெருமகிழ்ச்சியோடு தம் பணத்தை அந்த மனையில் முதலீடு செய்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா திரும்பிய கணேஷ் வீடுகட்ட விரும்பி கடனுக்காக ஒரு வங்கியை அணுகினார்.
kattumaanam8வங்கி அதிகாரிகள் அவரது மனையின் ஆவணங்களையும், மனையையும் ஆய்வு செய்த பிறகு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டனர். என்னவென்றால், அந்த இடத்தில் வீடு கட்டலாம் என்ற அரசின் அனுமதி பெறப்படவில்லை என்பதே அது. கணேஷ் தன்னுடைய ஆவணங்களைப் பார்த்தபோது அதில் அந்தப்பகுதி பஞ்சாயத்துத் தலைவரின் ஒப்புதலும் அந்த மனையில் வீடு கட்டலாம் என்ற அனுமதியும் இருந்தது. இந்த ஆவணத்தை வங்கி அதிகாரியிடம் காட்டி கேட்ட பிறகு பஞ்சாயத்து தலைவருக்கு இத்தகைய அனுமதி வழங்கும் அதிகாரம் இல்லை என்று சொல்லப்பட்டது. கணேஷின் தலையில் மற்றொரு இடி வந்து இறங்கியது. அரசாங்கம் ஒரு பெரிய தொழிற்பேட்டைக்காக அவர் வாங்கிய இடத்தை கையகப்படுத்தப்போகிறது என்பதுவே அது. அவ்விடம் விவசாய இடம் என்பதால் அரசாங்கம் தரக்கூடிய இழப்பீட்டுத்தொகை மிக மிகக் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொகையானது அவர் முதலீடு செய்த தொகையை விட மிக மிக குறைந்ததாகும்.
இங்கே யாரைக் குற்றம் சொல்வது?.
கணேஷ் வழக்கறிஞர் ஒருவரை அணுகியபொழுது முழுக்கதையையும் கேட்டுவிட்டு கைவிரித்த வழக்கறிஞர் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பே கவனத்துடன் இருந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மனையை விற்பனை செய்தவர் விவசாய நிலமாக விற்பனை செய்வதால் அந்த விற்பனை சட்டப்பூர்வமானது. அவருக்கு எதிராக வழக்கு எதுவும் தொடுக்க முடியாது என்றார்.
உடனே அந்த மனையை விற்பனை செய்ய முயற்சி செய்த கணேஷ் வாங்குவதற்கு யாருமே இல்லை என்ற கசப்பான உண்மையை உணர்ந்தார். மேலும் அந்தப் பகுதியில் முதலீடு செய்த அனைவருமே கையறு நிலையில்தான் இருக்கின்றனர் என்று தெரியவந்தது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அரசாங்கம் கையகப்படுத்துமேயானால் இருபது லட்சம் ரூபாய் இழப்பு தமக்கு ஏற்படும் என்று உணர்ந்த கணேஷ் வேதனையில் வெம்பினார்.
kattumaanam4
2. சேகர், ஒரு தனியார் வங்கியில் மூத்த அதிகாரியாக பணியாற்றுபவர். நிலப்பிரச்சனை தொடர்பாக என்னை சமீபத்தில் சந்தித்தார். சேகர் தம்முடைய மனையை, வீடுகளைக்கட்டி விற்கும் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு கொடுத்திருந்தார். அதற்கு ஈடாக வேறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றைப் பெற்றுக்கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் விலை 75லட்சம் என்று கூறப்பட்டது. இந்தப் பணமானது சேகர் விற்ற மனையின் விலையில் தள்ளுபடி செய்துகொள்ளப்பட்டு மீதத்தொகை அளிக்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் முடிவுசெய்து கொள்ளப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பானது சிறந்த கட்டுமானத்துடனும் நகர் பகுதியிலும், மூன்று மாதத்தில் குடியேறத் தக்கதாகவும் ஆக்கப்பட்டு வருகிறது என்று தகவல் தரப்பட்டது. ஒப்பந்ததாரர் அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேகரை வற்புறுத்தி அவரது பெயரில் பதிவுசெய்து கொள்ளச்செய்தார்.
திடீரென சேகருக்கு ஒரு மனமாற்றம். நகரின் வேறொரு பக்கத்தில் உள்ள பகுதியில் தமது அலுவலகத்திற்கு அருகிலேயே குடியிருக்கலாம் என்று முடிவு செய்தார். அதனால் ஒப்பந்ததாரரிடம் சென்று இந்த அடுக்கு மாடி குடியிருப்பை தாம் திருப்பி தந்துவிடுவதாகவும் அதற்கு இணையான ரொக்கத்தை தம்மிடம் தந்துவிடக்கூறியும் அந்தப் பணத்தைக் கொண்டு தாம் தமது அலுவலகத்திற்கு அருகே குடியிருப்பு வாங்க விரும்புவதாகவும் கூறினார். ஒப்பந்ததாரர் குடியிருப்பை தாம் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது எனவும் ஏனென்றால் அதற்குரிய பணத்தைத் தர தம்மிடம் ரொக்கம் இல்லை எனவும் எடுத்துரைத்தார். சேகர் விரும்பினால் அவரே அந்த குடியிருப்பை விற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த சூழ்நிலையில்தான் சேகர் என்னை வந்து சந்தித்தார். ஆவணங்களையும் திட்டங்களையும் அனுமதிகளையும் பரிசோதித்தப் பிறகு சேகர் ஒப்பந்ததாரரால் வகையாக ஏமாற்றப்பட்டு இருக்கிறார் என்று உணரமுடிந்தது. எப்படி என்றால் சேகருக்குத் தரப்பட்ட குடியிருப்பு முறையாக திட்டமிடப்படாமலும், வாகனம் நிறுத்த வசதி இல்லாமலும், அரசாங்க விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டு இருந்தது. அதனுடைய சந்தை மதிப்பு ஒப்பந்ததாரர் சொன்ன விலையிலிருந்து 25 சதவிகிதம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் மீறப்பட்ட விதிமுறைகளும், வெளிச்சமின்மையும், வசதியின்மையும் அந்த வீட்டை பிறர் வாங்குவதைத் தடுத்தது.
எளிமையாக காகிதங்களில் எழுதப்படும் பல விசயங்கள், சொல்லப்படும் விலைகள்,உண்மையில் மிகவும் சிக்கலானதாகும். ஆகையால் மனைகள் வாங்கும்பொழுதும், வீடுகளை வாங்கும் பொழுதும் நிபுணர்களைக் கொண்டு முறையாக பரிசீலித்து அதன் பிறகே ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். சேகர் இப்பொழுது 20 லட்சம் ரூபாய் இழந்துவிட்டு விற்கவோ குடியிருக்கவோ முடியாத ஒரு குடியிருப்பை விலைகொடுத்து வாங்கிவிட்டு நிற்கதியாக நிற்கிறார்.
மேற்சொன்ன கதைகள் நம் நாட்டில் தினம் தினம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. நிலத்தில் முதலீடு செய்யும் பொழுது நிபுணர் ஒருவரைக் கொண்டு முறையான ஆய்வுகளை செய்து ஆவணங்களை சரிபார்த்து வாங்குவதே புத்திசாலித்தனமாகும். அதுவே நமது பின்னாளைய தலைவலிகளைத் தவிர்க்கும்.
வீடு, மனை மற்றும் கட்டிடம் தொடர்பான ஆலோசனைகளுக்கு கீழ்க்காணும் முகவரியை அணுகவும்.

BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com